விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள இலந்தைக்குளம் ஊராட்சி, கொண்டையம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில், வருவாய்த்துறையின் மூலம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டாக்கள், நத்தம் பட்டா மாறுதலுக்கான ஆணை, வாரிசு சான்றிதழ், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிய பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான காசோலை, தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான வேலை உத்தரவு, வேளாண்மை துறை மூலமாக தென்னைக்கன்றுகளும், பாசிப்பயறு மினிகிட்களும், எள் மினிகிட்களும், மானிய விலையில் மழைத்தூவானும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வனத்துறை நிலத்தில் வீட்டுமனை பட்டாக்கான ஆணை, சமூக உரிமைக்கான நிலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக இலவச தையல் எந்திரங்களும் என 169 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 23-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மேலும் 1-7-2017 முதல் 31-7-2017 வரையுள்ள காலங்களில் சிறப்பு முகாம் தவிர பிற அனைத்து நாட்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுதோறும் சென்று புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் படிவம் 6-லிலும், நீக்குதல் மனுக்கள் படிவம் 7-லிலும், பெயர் திருத்தம், வயது, பாலினம், பிறந்த தேதி, புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்களை படிவம் 8-லிலும், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு மாறியவர்கள், மாறிய பாகத்தில் அவர்களது பெயரை பதிவு செய்து கொள்ள, படிவம் 8-யு ஆகிய இனங்களில் விண்ணப்பித்து வழங்கலாம்.
மேலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் வருவாய்த்துறை மட்டுமல்லாது, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற பிற அரசுத்துறைகள் மூலமும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. இதன்மூலம் கிராமமக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக தெளிவாக தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். குறிப்பாக முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் இந்த மக்கள் தொடர்பு முகாமிலோ அல்லது கிராமத்தில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிதாக தொடங்கப்பட்ட மனுக்கள் பதிவு செய்யும் பிரிவிலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.