பவானிசாகர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது - பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு

பவானிசாகர் அணை இந்த மாதத்தில் 2-வது முறையாக மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.
Published on

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் 8-ந் தேதி இரவு 11:30 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.

இதனால் அணையில் இருந்து 9 மேல் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கீழ்பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

அதேசமயம் திறக்கப்படும் தண்ணீரை காட்டிலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 104.97 அடியாக ஆனது. இந்த நிலையில் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 127 கன அடி தண்ணீர் வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த மாதத்தில் 2-வது முறையாக மீண்டும் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. மாலை 6 மணிக்கு அணைக்கு வரும் தண்ணீர் மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 7 ஆயிரத்து 609 கன அடி தண்ணீர் வந்தது.

கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் கீழ் மதகுகள் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீரும், 9 மேல் மதகுகள் வழியாக உபரி நீராக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்து உபரி தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும். எனவே பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் தண்ணீர் வரத்தை அணைப் பிரிவு உதவி செயற்பொறியாளர் சிங்கார வடிவேலன் தலைமையிலான பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com