புதுடெல்லி,
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. வரி பிரச்சினை இல்லாததால், அங்கு அவர்கள் பணத்தை போட்டு வைக்கிறார்கள்.
ஆனால், அந்த வங்கி கணக்கு விவரங்களை அவர்கள் பிறந்த நாட்டுடன் பகிர்ந்துகொள்வதற்காக, சுவிட்சர்லாந்துக்கு உலக அளவில் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக, சுவிட்சர்லாந்து ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி, முதல் முறையாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நூற்றுக்கணக்கான வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அடுத்தடுத்து வங்கி கணக்கு விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
இதற்கிடையே, வரி பிரச்சினை இல்லாத கேமன் தீவுகள், பனாமா தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்டவற்றில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் கம்பெனிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவை சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது.
எனவே, அந்த அறக்கட்டளைகள் மற்றும் கம்பெனிகள், சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. அறக்கட்டளைகளுக்கு சுவிட்சர்லாந்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இவற்றில் கேமன் தீவுகளில் தொடங்கப்பட்ட பி.தேவி அறக்கட்டளை, பி.தேவி குழந்தைகள் அறக்கட்டளை, தினோத் அறக்கட்டளை, அகர்வால் குடும்ப அறக்கட்டளை, தேவி லிமிடெட், சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவை அடங்கும்.
தொழில் அதிபர்களில் அதுல் புஞ்ச், கவுதம் கெய்தான், சதீஷ் கல்ரா, வினோத் குமார் கன்னா, துல்லாபாய் கன்வெர்ஜி வகேலா உள்ளிட்டோர் அடங்குவர். நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே இறந்து விட்டதால், அவர்களின் வாரிசுகள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கருப்பு பணத்தை பதுக்க இந்த அறக்கட்டளைகளை பயன்படுத்தி இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
கருப்பு பண விசாரணையில் நிர்வாகரீதியான உதவி தேவை என்று இந்தியா வேண்டுகோள் விடுத்ததன் பேரில், சுவிட்சர்லாந்து நோட்டீஸ்களை அனுப்பி உள்ளது. அதிலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், தனிநபர்களும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக உரிய ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகே சுவிட்சர்லாந்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அந்த அறக்கட்டளை மற்றும் கம்பெனிகளின் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதற்கு முந்தைய நடவடிக்கையாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பினால், வாரிசு நியமனதாரரை நியமிக்குமாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. நோட்டீஸ்கள், சுவிட்சர்லாந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தியாவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பியவர்களும் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். அவர்களின் வங்கி கணக்கு விவரங்களும் இந்தியாவிடம் அளிக்கப்பட உள்ளன.