திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் கல்வீசி தாக்கி மோதல்: இந்து அமைப்பினர்-திராவிடர் கழகத்தினர் 16 பேர் கைது

திருச்சியில் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் கல்வீசி தாக்கி மோதல் நடந்த சம்பவத்தில் இந்து அமைப்பினர்-திராவிடர் கழகத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடைக்கு கி.வீரமணி வருவதற்கு முன்பு, திருச்சி தாராநல்லூர் கீரக்கடை பஜாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகள் பேசினர். அப்போது மாநில பொதுச்செயலாளர் அறிவுக்கரசு, ராதை-கிருஷ்ணன் குறித்து பேசியதாக தெரிகிறது.

அப்போது, அவர் தவறாக பேசியதாக கூறி இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர் கண்டித்து, எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொதுக்கூட்ட மேடை நோக்கி கற்களையும், செருப்புகளையும் வீசினர். அப்போது மேடையில் இருந்த தி.க.வினர் சிலர் அங்கிருந்த நாற்காலிகளையும், கற்களையும் இந்து அமைப்பினரை நோக்கி வீசினார்கள். தகவல் கிடைத்ததும் காந்திமார்க்கெட் போலீசார் விரைந்து சென்று, இந்து அமைப்பை சேர்ந்த சிலரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இந்த பிரச்சினை முடிந்த பின்னர், பொதுக்கூட்ட மேடைக்கு கி.வீரமணியை பலத்த பாதுகாப்புடன் தொண்டர்கள் அழைத்து வந்தனர். பொதுக்கூட்ட மேடையில் அவர் பேசிவிட்டு புறப்பட்டு சென்றபோது, இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து மறித்தனர்.

இதனால், அங்கு மீண்டும் தி.க.வினருக்கும், இந்து அமைப்பினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். போலீசார் மோதலை தவிர்க்க, லத்தியால் விரட்டியடிக்க முயன்றனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்தவர்களை விடுவிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கி.வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அங்கு விரைந்து வந்து அமைதி ஏற்படுத்தினார்.

இந்த மோதல் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ்பிரபு கொடுத்த புகாரின்பேரில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் காட்டூர் சேகர், கனகராஜ், ஸ்ரீரங்கம் மோகன்தாஸ், செந்தமிழ் இனியன், ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அறிவுக்கரசை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதுபோல திராவிடர் கழகம் தரப்பில் ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பாரதீய ஜனதா, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் மணிகண்டன், மனோஜ்குமார், ராஜ், தனவேந்தன், ராஜசேகர், சுரேஷ்பிரபு, தமிழ்வண்ணன், சண்முகம், பாலமுருகன் ஆகிய 9 பேரை இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com