அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது ; தந்தை-மகன் பரிதாப சாவு

அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது ; தந்தை-மகன் பரிதாப சாவு
Published on

நல்லம்பள்ளி,

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 30). ஜவுளி நிறுவனத்தில் ஆடை ஏற்றுமதியாளராக பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (28). இவர்களுடைய மகன் விவன் (3). பாரப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (29). இவருடைய மனைவி அனிதா (28). இவர்களது மகன் கிருஷ்ணநாயக் (2). சுப்புராஜூம், மகேந்திரனும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்தநிலையில் சுப்புராஜ் குடும்பத்தினரும், மகேந்திரனின் குடும்பத்தினரும் காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலை சுப்புராஜ், கிருத்திகா, விவன், மகேந்திரன், அனிதா, கிருஷ்ணநாயக் ஆகியோர் ஒரு காரில் காஞ்சீபுரம் நோக்கி புறப்பட்டனர். நேற்று காலை 8 மணி அளவில் அவர்கள் சென்ற கார் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது சேசம்பட்டி பிரிவு சாலை அருகில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும், சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் கார் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த விவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், சுப்புராஜ் உள்ளிட்ட 5 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்புராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயம் அடைந்த கிருத்திகா, மகேந்திரன், அனிதா, கிருஷ்ணநாயக் ஆகிய 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த குழந்தை விவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தந்தை-மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com