

சேலம்,
கென்யா நாட்டின் நைரோபி பகுதியை சேர்ந்தவர் எரிக் மொலிங்கே இந்துலி (வயது 26). இவர் சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். அதே கல்லூரியில் அதே நாட்டை சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவர் எம்.எஸ்சி. படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி எரிக் மொலிங்கே இந்துலி அந்த மாணவி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென மாணவியின் கை, கால்களை கட்டிபோட்டார். பின்னர் அவர் மாணவியை கற்பழித்தார். இதுதொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த எரிக் மொலிங்கே இந்துலியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட, எரிக் மொலிங்கே இந்துலிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார்.