புதுடெல்லி,
மத்திய அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்காக கணக்கெடுப்பு பணிகளை நடத்த உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வீடுகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வீட்டில் உள்ளவர்களிடம் 31 கேள்விகள் கேட்கப்படும்.
தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட்போன், சைக்கிள், இருசக்கர வாகனம், கார், ஜீப், வேன், ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர், டெலிவிஷன், லேப்-டாப் அல்லது கம்ப்யூட்டர், இணையதள வசதி, செல்போன் எண் ஆகியவை கேட்கப்படும். செல்போன் எண் கணக்கெடுப்பு தொடர்பான தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
இவைதவிர கட்டிட எண், வீட்டின் தரை, சுவர், கூரை எதனால் ஆனது, வீட்டின் பயன்பாடு, வீட்டில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, வீட்டில் உள்ளவர்களின் குடும்ப தலைவர் பெயர், பாலினம், ஆதிதிராவிடரா அல்லது பழங்குடியினரா அல்லது பிற சமுதாயத்தினரா, வீட்டின் உரிமையாளரா, வீட்டில் உள்ள அறைகள், திருமணமான தம்பதிகள் எத்தனை,
குடிநீர் ஆதாரம், எந்தவகை மற்றும் எத்தனை கழிவறைகள், குளியலறை, சமையலறை, சாப்பிடும் முக்கிய தானியம், சமையல் எரிவாயு இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய எரிபொருள் ஆகியவை பற்றியும் கணக்கெடுப்பு ஊழியர் கேட்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2021 கணக்கெடுப்பு செல்போன் செயலி (ஆப்) மூலம் எடுக்கப்படும். இது 2021 மார்ச் 1-ந்தேதியும், காஷ்மீர் போன்ற பனிப்பிரதேசங்களில் 2020 அக்டோபர் 1-ந்தேதியும் தொடங்கும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டை வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.