கோவை,
ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் நமது அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்த நாடு மதத்தை சார்ந்ததாக இருக்கக் கூடாது. குடியுரிமை என்று வருகிறபோது அது மதத்தை ஆதாரமாகக் கொண்டதாக இருக்கக் கூடாது என்று விரும்பினார்கள்.
அதன் அடிப்படையில் தான் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நமது அரசியல் சட்டத்தில் கூட தொடக்கத்திலேயே, இந்திய மக்களாகிய நாம் என்று தான் தொடங்குகிறது. இந்து மக்களாகிய நாம் என்றோ வேறு மதத்தை குறிப்பிட்டோ தொடங்கவில்லை. இப்போது அதன் மாண்பு சிதைக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நிலைகுலைந்து போகும்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ.வால் அரசியல் அமைப்பு சட்டமே நிலை குலைந்து போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய மூன்றையும் தனித்தனியாக பார்க்க கூடாது. அவை ஒன்றோடொன்று பிண்ணி பிணைந்து இருக்கிறது.
என்.ஆர்.பி. கணக்கெடுப்பு தொடங்கினால் நாம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்திய மக்களிடம் அத்தகைய ஆவணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. என்னிடமே கூட ஆவணங்கள் இல்லை. என்னுடைய பிறந்த நாள், எனது தலைமை ஆசிரியர் எழுதியதுதான். அவர் என்ன எழுதினாரோ அதுதான் எனது பிறந்தநாள். எனவே, இது சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
ஏழைகளுக்கு எதிரானது
இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. இந்திய ஏழைகள் எல்லோருக்கும் எதிரானது. எனவே தான் நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக போராட தொடங்கி இருக்கிறார்கள். போராடும் மக்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜனதா மந்திரி பேசினார். இப்போது டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர்.
இந்த கலவரம் நடந்து கொண்டு இருக்கும்போது கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸ் முயற்சிக்கவில்லை. போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. இந்த கலவரத்துக்கு பின்னால் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பின்பற்றுகிறவர்கள் தான் இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் நிர்ப்பந்தம்
டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பட்டில் தான் இருக்கிறது. எனவே, டெல்லி கலவரத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தை திறந்த மனதோடு பார்க்கவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இளம் தலைவர் கன்ணைய குமார் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள் ளது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு இப்போது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதற்கு பின்னால் பா.ஜனதா கட்சியின் அழுத்தம் உள்ளது. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
இந்தியா கடந்த காலத்தில் சுதந்திரமான பொருளாதாரக் கொள்கையை கடைபிடித்து வந்தது. தற்போது அது அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் ஆர்.தேவராஜ், சி.தங்கவேல், ஜே.ஜேம்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.