உன்னத இசையாலே உலகை வென்றவர்

தமிழ்த் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்றவர் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
Published on

ன்று (மார்ச்1-ந் தேதி) நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்ததினம்.

தமிழ்த் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்றவர் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் 1910-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி, மாயவரத்தில் கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே இசையில் அதிகம் நாட்டம் கொண்டிருந்த தியாகராஜன் அதிகம் படிக்கவில்லை. ஏழு வயதிலேயே மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். பாகவதரின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் நாடக உலகில் அவர் பெரும் புகழ் பெற்றார். தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கையிலும் பாகவதர் நாடகங்கள் சக்கை போடு போட்டன.

அப்போது நாடக உலகில் முடிசூட மன்னனாக விளங்கியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. பாகவதர் புகழ் பரவுவதை அறிந்து பாகவதர் நாடகத்தை பார்ப்பதற்காக மாறு வேடத்தில் சென்றார். இடைவேளையின் போது பின்புறத்தில் இருந்து ஒருவர் வந்து பாகவதர் உங்களை அழைத்து வரச் சொன்னார் என்றதும் கிட்டப்பாவுக்கு ஆச்சரியம். நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னை கவனித்திருக்க வேண்டும் என்று பாகவதரின் மதி நுட்பத்தை உணர்ந்தபடியே உள்ளே சென்றார். அவரை வரவேற்று கிட்டப்பாவின் காலில் விழுந்து வணங்கினார் பாகவதர். பின்னாளில் வள்ளி திருமணம், பவளக்கொடி நாடகங்களின் வழியே பாகவதரின் குரல் வளத்தைப் பார்த்து பிரமித்த கிட்டப்பா, இன்று முதல் நீ தியாகராஜன் அல்ல தியாகராஜ பாகவதர் என்ற பட்டமளித்து, தன்னுடைய பவள மாலையை அணிவித்து மகிழ்ந்தார். பாகவதர் நடித்த பவளக்கொடி நாடகத்தைப் பார்த்த செல்வந்தரான அழ.ராம.அழகப்ப செட்டியார் திரைப்படமாக தயாரித்தார். கே.சுப்பிரமணியன் இயக்கத்தில் தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி நடிக்க 1934-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது பவளக்கொடி. 60 பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தில் கண்ணா கரிய முகில் வண்ணா... என்று பாடி தன் அமுத கானத்தில் அனைவரையும் கட்டிப்போட்டார் பாகவதர். பேசும் படம் வரத்தொடங்கிய இந்த 60 ஆண்டுகளில் முதல் படத்திலேயே புகழின் உச்சம் தொட்டவர்கள் பாகவதரும் சிவாஜியும் மட்டும்தான்.

அதன்பின் நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி என வரிசையாக வெற்றிப்படங்கள் வர, பாகவதரின் புகழ் வானளாவ உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக 1944-ல் தீபாவளிக்கு வெளிவந்த ஹரிதாஸ், சென்னை பிராட்வே தியேட்டரில் மூன்று வருடங்கள் ஓடி எல்லோரும் பிரமிக்கும் சாதனை வெற்றியை தந்தது. பாகவதர் தன் வாழ்நாளில் நடித்த படங்கள் 14 தான். ஆயினும் 100 படங்களில் நடித்தவர்களுக்கு கூட கிடைக்காத புகழை அவர் பெற்றார். பாகவதர் பாடிய புகழ்பெற்ற பாடல்களில் சில;

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வதனமோ, சந்திரபிம்பமோ...(சிவகவி) , ராதே உனக்கு கோபம் ஆகாதடி...(சிந்தாமணி), மன்மத லீலையை வென்றார் உண்டோ?, கிருஷ்ணா முகுந்தா முராரே...(ஹரிதாஸ்), பூமியில் மானிட ஜென்மம்(அசோக்குமார்),

ஹரிதாஸ் படம் வெளிவந்த நேரத்தில்தான் பாகவதர் வாழ்க்கையில் சோதனை சூழ்ந்தது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி பத்திரிகையில் அவதூறாக எழுதிவந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதரின் பெயரும் அடிபட அவருடைய வெற்றிப் பயணத்தில் சற்றே இறங்கு முகம். அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய விடுதலைக்காக பெரியார், அண்ணா உள்பட பலரும் பெரும் முயற்சி மேற்கொண்டார்கள். பின்னாளில் அவர் நிரபராதி என நீதிமன்றம் விடுதலை செய்தது. பாகவதர் விடுதலை அடைந்தபின் அமரகவி, புதுவாழ்வு, சிவகாமி ஆகிய படங்களில் நடித்தார்.

பாகவதர் ஒருமுறை இயக்குனர் கே.சுப்பிரமணியனோடு ரெயிலில் பயணம் செய்தார். அப்போது வங்காளத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியும் பயணம் செய்தனர். காதில் கடுக்கன், கையில் மோதிரம், பட்டு வேட்டி சட்டை, நெற்றியில் ஜவ்வாது பொட்டு என்று இருந்த பாகவதரைப் பார்த்து அந்த பெண் விழுந்து விழுந்து சிரித்தார். அவளுடைய கணவன் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பெண்ணின் சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விரும்பினார் பாகவதர். பெரும் வற்புறுத்தலுக்குப் பிறகு அந்த பெண்ணின் கணவன் சொன்னான் நம்ம ஊர் பெண்கள்கூட இவ்வளவு நகைகள் போட்டுக் கொள்ள மாட்டார்கள், இவர் இவ்வளவு நகைகள் போட்டுக் கொண்டிருக்கிறாரே மூக்குத்தி மட்டும்தான் பாக்கி என்று சொன்னான்.

அவள் ஒரு முட்டாள், நீங்கள் யார் என்று தெரியாமல் சொல்லிவிட்டாள் அவளை மன்னித்து விடுங்கள், என்றான் அந்த பெண்ணின் கணவன். அந்த அம்மா மீது எனக்கு வருத்தமில்லை, சாதாரண வெள்ளைப் புடவை அணிந்து நெற்றியில் குங்குமத்துடன் எளிமையாகத் தோன்றும் அவர் சாட்சாத் சரஸ்வதி தேவியாக காட்சியளிக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகளை சரஸ்வதிதேவியின் வார்த்தைகளாக மதிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்போதே தன்னுடைய நகைகளை கழற்றி துணியில் முடிந்து வைத்துக்கொண்டார். அதேபோல் திருநீலகண்டர் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி இனி பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிவதை விட்டுவிடுங்கள். கதர் ஆடை அணியுங்கள் என்று பாகவதருக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, அன்று முதல் கதர் ஆடை அணிந்தார். மாற்று கருத்துகளை மதிக்கும் குணமுடையவராக இருந்தார் பாகவதர்.

தங்க விக்கிரமாக ஜொலித்த பாகவதருக்கு ஏராளமான காதல் கடிதங்கள் வருவதுண்டு, படித்துவிட்டு அப்போதே தீயிட்டு எரித்து விடுவாராம். அதேபோல் பாகவதர் கிராப் அப்போது படு பிரபலம். அதேபோல் தன்னோடு நடிக்கும் சிறு நடிகர்களுக்கு மாதந்தோறும் உதவி செய்வாராம். கொடுத்தே பழக்கப்பட்ட பாகவதரின் கைகள் ஒருபோதும் தாழ்ந்ததில்லை, அவரது புகழைப் போல் எப்போதும் அது உயரத்திலேயே நிலை பெற்றுவிட்டது. பாகவதரின் பெரும் புகழைக் கண்ட நேரு, காமராஜர் மூலமாக அரசியலுக்கு அழைத்தபோதும், எனக்கு அரசியல் தெரியாது என்று மறுத்தார். தனக்கு எது பொருந்தும், எது பொருந்தாது என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். இறுதி காலத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது பலரும் உதவ முன்வந்தும் அதை ஏற்க மறுத்தார் பாகவதர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் 1959-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவர் தந்தையின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர்தான் அவரது கடைசி படமான சிவகாமி வெளியானது.

காற்று இருக்கும்வரை, இவ்வுலகம் இருக்கும். இவ்வுலகம் இருக்கும்வரை பாகவதரின் கானம் இருக்கும்... மறைந்தது அவரது உடல்தான் அவரல்ல.

ப.வெற்றிச்செல்வன், திரைப்பட இயக்குனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com