மதுரை,
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவின்படியும் கலெக்டர் வினய் அறிவுரையின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் ராதாகிருஷ்ணபாண்டியன், தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோர் வழிகாட்டுதலின்படியும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டம் மற்றும் சுயதொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் ஆகியோருக்கான தேசிய ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. இதில் வருங்கால வைப்புநிதி உதவி ஆணையர், ஆயுள் காப்பீட்டுக்கழக மதுரை கிளை மேலாளர், பொதுசேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய தகவல் மைய மாவட்ட அலுவலர்,மதுரை தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்புதிட்டம்) மைவிழி செல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் சுயதொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் ஆகியோருக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றின் பயன்கள் அனைத்து தொழிலாளர்களை சென்றடையும் வகையில் அதிக அளவில் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுடையவர்கள் சேரலாம். தொழிலாளர்கள் செலுத்தும் பங்குத் தொகைக்கு ஈடான தொகை மத்திய அரசால் செலுத்தப்படும். 60 வயது நிறைவுக்கு பின்னர் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். இது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு இந்த திட்டத்தில் தகுதியுடைய அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் முனைவோர்கள் இணைக்கப்படுவது கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் அருகிலுள்ள பொது சேவை மையத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.