தஞ்சையில் 100 ஆண்டுகள் பழமையான குளம் தூர்வாரும் பணி மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

தஞ்சையில் 100 ஆண்டுகள் பழமையான குளம் தூர்வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் தொடங்கி வைத்தார்.
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள குளங்கள் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஒத்துழைப்புடன் பொதுநல அமைப்பினர் உதவியுடன் தூர்வாரப்பட்டு வருகிறது. தஞ்சை மேம்பாலம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் உள்ளது. இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. பல ஆண்டுகள் தூர்வாரப்படாததால் குட்டை போல் காட்சி அளிக்கிறது.

இந்த குளத்தை தூர்வார மத்தியஅரசின் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநராட்சி பதிவு பெற்ற பொறியாளர் சங்கம் ரூ.1 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. நேற்று பொக்லின் எந்திரம் மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு, குளம் தூர்வாரும் பணி தொடங்கியது. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேகரிக்கப்படும்

பின்னர் அவர் கூறும்போது, தஞ்சை மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நீர்நிலையாக தூர்வாரப்பட்டு வருகிறது. பருவமழையின் போது அனைத்து குளங்களிலும் மழைநீரை சேமிக்க எல்லா நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் அருகே உள்ள குளம் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவை கொண்டது. இந்த குளத்தை தூர்வாரி 2 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு, குளத்தின் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்படும். மழை பெய்தால் சாலையில் வீணாக ஓடும் மழைநீர் இக்குளத்தில் சேகரிக்கப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றார்.

இதில் நகரமைப்பு அலுவலர் தயாநிதி, துணை அலுவலர் ராஜசேகர், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், ஆறுமுகம், பாபு, மாநகராட்சி பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் துரைராஜ், திருவேங்கடம், யுவராஜ், சார்லஸ் மற்றும பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com