இரவு நேரத்தில் பெண் பயணியை பாதியில் இறக்கிவிட்ட நடத்துனர்: பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

அவினாசி அருகே இரவு நேரத்தில் பெண் பயணியை பாதியில் இறக்கி விட்ட நடத்துனரை கண்டித்து அந்த பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

அவினாசி,

திருப்பூர் புஸ்பா பஸ் நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் பயணிகள் அதிகளவில் இருந்தனர். அதில் ஏறிய பெண் பயணி ஒருவர் அவினாசியை அடுத்த தெக்கலூருக்கு டிக்கெட் கேட்டு வாங்கினார்.

இந்த நிலையில் தெக்கலூருக்கு 4 கிலோ மீட்டர் முன்னதாக சென்ற போது திடீரென்று பஸ்சை நிறுத்திய பஸ் நடத்துனர் அந்த பெண் பயணியிடம் இந்த பஸ் பைபாஸ் ரோட்டில் செல்கிறது. எனவே இங்கு இறங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் அந்தப் பெண் பயணி, பஸ் நிறுத்தத்துக்கு முன்னதாகவே இரவு நேரத்தில் இறக்கிவிட்டால் நான் தனியாக எப்படி செல்ல முடியும். தெக்கலூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்றார்.

இதனால் பஸ் நடத்துனர் மற்றும் அந்த பெண் பயணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாதி வழியில் நடத்துனர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்தப் பெண் தெக்கலூருக்கு சென்று தனது குடும்பத்தினரிடமும், ஊர் பொதுமக்களிடமும் தனக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் நேற்று காலை 9 மணிக்கு சம்பவ இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அந்த பஸ்சை தெக்கலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இனிமேல் இதுபோல் நடைபெறாது என பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பஸ்சை விடுவித்தனர். பஸ் சிறைபிடிப்பு சம்பவத்தால் தெக்கலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com