ரபேல் போர் விமான ஊழலை பற்றி காங்கிரஸ் அன்றே சொன்னது தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் பேச்சு

ரபேல் போர் விமான ஊழலை பற்றி காங்கிரஸ் அன்றே சொன்னது என்று தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் பேசினார்.
ரபேல் போர் விமான ஊழலை பற்றி காங்கிரஸ் அன்றே சொன்னது தேர்தல் பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் பேச்சு
Published on

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று மேலபெருவிளையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் சுங்கான்கடை, ஐக்கியபுரம், பிராந்தனசேரி, திருமலை காலனி, குலாலர் தெரு, அம்பேத்கர் காலனி, பனவிளை, களியங்காடு, பார்வதிபுரம், கோட்டவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அவருடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக பிரசாரத்தை தொடங்கிய போது எச்.வசந்தகுமார் பேசுகையில் கூறியதாவது:-

ரபேல் போர் விமான பேரத்தில் பா.ஜ.க. மூடி மறைத்த உண்மைகள் வெளியே வந்து விட்டன. ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்தது உண்மை என்று காங்கிரஸ் அன்றே சொன்னது. ஆனால் அப்போது பேப்பர் காணவில்லை என்றனர். பின்னர் ஜெராக்ஸ் இருக்கிறது என்றார்கள். ஆனால் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் படியும், செய்திகளின் படியும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

எனவே ரபேல் ஊழலுக்கு காரணமான பிரதமர் நரேந்திரமோடி உடனே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று குமரி மாவட்டம் வந்து எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை சந்தித்தார். பின்னர், அவருக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com