ஏழைகளுக்கு உணவு அளிக்க ரூ.4½ லட்சம் செலவழித்த தம்பதி

கொரோனா தொற்று மையமாக திகழும் மும்பையில் ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்காக ஒரு தம்பதியர் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் இருந்து ரூ..4½ லட்சம் செலவு செய்துள்ளனர்.
ஏழைகளுக்கு உணவு அளிக்க ரூ.4½ லட்சம் செலவழித்த தம்பதி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் மையமாக மும்பை விளங்குகிறது. அங்கு மலாட் பகுதியில் அம்புஜ்வாடி என்ற இடத்தில் சிறிய அளவில் ஆங்கிலப்பள்ளி ஒன்றை முதல்வராக இருந்து நடத்தி வருபவர், மிஸ்கா ஷேக் (வயது 38). இந்தப் பெண்ணின் கணவர், பயாஸ் ஷேக் (45) தனியார் ஒப்பனை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

இவர்களது பகுதியில் வாழ்கிற ஏழை மக்கள், கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்விழந்து பரிதாபமாக நிற்பதைக் கண்டு மனம் வெதும்பினர். வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் போல இவர்களும் ஊரடங்கால் ஏழைகள் படும் அல்லல்களை கண்டு வாடி, தங்கள் வாழ்நாள் சேமிப்பு பணத்தை கொண்டு களம் இறங்கி உதவிகள் செய்து வருகிறார்கள்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை கணவனும், மனைவியும் சேர்ந்து செய்திருக்கிறார்கள். 1500 பேருக்கு ஊரடங்கு காலத்தில் உணவுப்பொருட்களும், ரேஷன் பொருட்களும் வழங்கி இருக்கிறார்கள்.

இதுபற்றி பயாஸ் ஷேக் கூறியதாவது:-

மார்ச் இறுதியில் ஊரடங்கு போட்டபோது முதலில் ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டோம். பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கிச்சடி உணவு வழங்கினோம். ஆனால் அது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதாது என்று தெரிந்து கொண்டோம். எங்கள் சொந்தப்பணத்தை செலவு செய்ய தீர்மானித்தோம்.

அதைத் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உணவும், ரேஷன் பொருட்களும் வழங்க தொடங்கினோம்.

என் மனைவி மிஸ்கா ஷேக் தனது வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் உள்ள பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு தொடர்ந்து உதவலாம் என கூறினார். நானும் சம்மதித்தேன். கடந்த 4 மாதங்களாக சுமார் ரூ.4 லட்சம் செலவு செய்து, மக்களுக்கு உணவும், ரேஷன் பொருட்களும் வழங்கி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தம்பதியரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில்தான் வசிக்கின்றனர். சொந்த வீடு வாங்குவதற்காக சேமித்து வந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் ஏழை மக்கள் படும்பாடு பார்த்து மனம் இரங்கி தங்களது சேமிப்பை எடுத்து செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

தங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கிற குழந்தைகளின் பெற்றோருக்கு கொரோனாவால் வருமானம் இன்றி, கட்டணம் செலுத்த முடியவில்லை என தெரிந்தபோது, தாராள மனதுடன் 3 மாத கட்டணத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

மலாட் பகுதியில் இந்த தம்பதியரின் சேவை, பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இப்படிப்பட்ட மனிதர்களால்தான் இன்னும் மனிதம் இந்த மண்ணில் வாழ்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com