8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு: விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து விவசாயிகள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
Published on

அரூர்,

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த சாலை சேலம், தர்மபுரி உள்பட 5 மாவட்டங்கள் வழியாக அமைய இருந்தது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்த நிலம் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது. 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் 8 வழிச்சாலை அமைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இதையடுத்து இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் விவசாயிகள் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மலங்கப்பாடி, இருளப்பட்டி, புதுப்பட்டி, கொக்கராப்பட்டி, பள்ளிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, முத்தானூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் அவர்கள் வாழைக்குலை, தேங்காய் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் நிரந்தரமாக 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com