

திருச்சி,
கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பனியன் தொழிற்சாலைகள், கொசு வலைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கொரோனா வைரசால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், இங்கு வேலைபார்த்த பிற மாவட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பினர்.
இந்தநிலையில் தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட தொடங்கியுள்ளன.
இதனால், சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் கரூர், திருப்பூர் சென்ற வண்ணம் உள்ளனர். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு ஏராளமான தொழிலாளர்கள் வந்திருந்தனர்.
திருச்சியில் இருந்து கரூர் மற்றும் திருப்பூருக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அந்த இரண்டு மாவட்டங்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை மண்டலத்தில் இருப்பதால் திருச்சி மண்டல பஸ்களில் இவர்கள் திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாத்தலை வரை சென்று அங்கிருந்து கோவை மண்டல பஸ்களில் ஏறி செல்கிறார்கள்.
நீண்ட வரிசையில் நின்றனர்
இதன் காரணமாக, பெட்டவாத்தலை பஸ்களில் இடம் பிடிப்பதற்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்கும்படி வலியுறுத்திய கண்டக்டர்கள் அவர்கள் கை கழுவுவதற்காக கிருமி நாசினியும் கொடுத்தனர்.