கலெக்டர் அலுவலகத்தில் தாண்டவன்குப்பம் கிராம மக்கள் தர்ணா

மாற்றுமனை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாண்ட வன்குப்பம் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தாண்டவன்குப்பம் கிராம மக்கள் தர்ணா
Published on

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் அருகேயுள்ள தாண்டவன்குப்பத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மாற்று மனை கொடுக்கவில்லையாம். இதனால் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக நேற்று மதியம் கடலூருக்கு வந்திருந்தனர். அங்கு அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அவர்கள் கூறியதாவது:-

கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தாண்டவன் குப்பம் குடிசை பகுதியில் வசிக்கிறோம். என்.எல்.சி.யில் ஆரம்ப காலத்தில் இருந்தே சுரங்க வேலை செய்து வருகிறோம். அதன் காரணமாக எங்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மின்சாரம் வசதி, மருத்துவ வசதி, பள்ளிக்கூடம் வசதி போன்றவற்றை செய்து தந்தது.

ஆனால் கடந்த 11 ஆண்டுகாலமாக சுரங்க விரிவாக்கப்பணிக்காக எங்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக மின்சாரம், குடிநீர், மருத்துவமனைவசதி, பள்ளிக்கூடம் வசதி ஆகியவற்றை என்.எல்.சி. நிர்வாகம் தன்வசம் எடுத்துக்கொண்டது. இதனால் நாங்கள் என்.எல்.சி.யையொட்டியுள்ள நகர பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம்.

ஆனால் காலிசெய்ய சொல்லி என்.எல்.சி. நிர்வாகம் எங்களை நிர்பந்தப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாற்றுமனை தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு மாற்றுமனை தரவில்லை. அதோடு நாங்கள் வசிக்கும் பகுதியில் மலைபோல் நிலக்கரியை குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து பறந்து வரும் கரித்துகள்களால் எங்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களுக்கு மாற்றுமனை தர உத்தர விடக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அவர்களிடம் புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com