திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக பக்தர்கள் வணங்குவதால் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதில் கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத்தின் போதும், சித்தரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி 18-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை உள்ளது. சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசுகையில், உணவு விடுதிகள் மற்றும் சமுதாய மடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ள எவரையும் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு பொருட்களை திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. உணவகத்தில் மற்றும் தேநீர் விடுதிகளில் ஈ மொய்க்காதவாறு மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். கழிவு பொருட்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். காலாவதியான பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர்கள் கலைஷ்குமார், சந்திரமோகன், ராஜ்குமார், மோகன்குமார், சுப்பிரமணியன், ஓட்டல் சங்க நிர்வாகிகள் மண்ணுலிங்கம், ஜெய்சங்கர், சந்திரன், சதீஷ், ராமச்சந்திர உபாத்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.