ஆக்கிரமிப்பின் பிடியில் ராஜவாய்க்கால் தூர்வாரக்கோரி மீட்பு குழுவினர் மனு

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும் என்றும் மீட்பு குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தேனி ராஜவாய்க்கால் மீட்பு குழுவினர் ஒருங்கிணைப்பாளர் பொன்முருகன் தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ராஜவாய்க்கால், தேனி கருவேல்நாயக்கன்பட்டி அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை 29, 30, 31, 32 ஆகிய வார்டுகள் வழியாக செல்கிறது. தேனி நகரில் பெய்யும் மழைநீர் இந்த வாய்க்கால் வழியாக தாமரைக்குளத்துக்கு செல்லும். விவசாய பயன்பாட்டுக்கும், நிலத்தடி நீர் உயர்வதற்கும் இந்த வாய்க்கால் பயன்பட்டது.

தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்த வாய்க்காலில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதர்மண்டி கிடக்கும் இந்த வாய்க்காலில் பாம்புகள், விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பாக தேனி மக்கள் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் இந்த வாய்க்கால் நீரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வாய்க்கால் காணாமல் போய்விட்டது. இந்த வாய்க்காலை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். மேலும், கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்த மனுவில், பெரியகுளம் கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள பாப்பியபட்டி கண்மாயில் முறைகேடாக மண், மணல் அள்ளி சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, மண், மணலை முறைகேடாக அள்ளி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். தேனி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோபாலபுரத்தில் சுமார் 1 சென்ட் கிராம பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த நிலம் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 38 பேர் மீது போலீஸ் நிலையத்தில் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்து, கிராம பொது நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்மணலார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்மணலாரில் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருக்க சொந்த வீடு கிடையாது.

அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் எங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி ஒன்றிய செயலாளர் வீரமணி அளித்த மனுவில், கொடுவிலார்பட்டியில் இருந்து ஸ்ரீரெங்கபுரம் செல்லும் சாலையோரம் உள்ள பெரிய கண்மாய், பி.டி.ஆர். கால்வாயின் கடைமடை கண்மாய் ஆகும். சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும், 5 கிராமங்களுக்கு நிலத்தடி நீர் உயர்வதற்கான ஆதாரமாகவும் இந்த கண்மாய் உள்ளது. பி.டி.ஆர். கால்வாயின் நீர்வழிப்பாதையில் நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கண்மாயை தூர்வாரி கரைகளை உயர்த்தி நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அரண்மனைப்புதூர் வசந்தம் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அரண்மனைப்புதூர் ஊராட்சி வசந்தம் நகரில் 20 அடி மண் பாதை உள்ளது. அது போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த பாதையில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தெரு விளக்குகள் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com