உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலி மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாதியில் ரத்து

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், மனு கொடுக்க வந்தவர்கள் பெட்டியில் போட்டு சென்றனர்.
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தாறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் திங்கட்கிழமையான நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலக மேல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. கூட்ட அரங்கில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக கீழ்தளத்தில் மனுக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். பதிவு செய்த மனுக்களை கூட்ட அரங்கில் இருந்த அதிகாரிகளிடம் சிலர் கொடுத்தனர்.

பாதியில் ரத்து

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியானது. இதன் எதிரொலியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மனுக்கள் பதிவு செய்யும் பணியும் நிறுத்தப்பட்டது. அங்கு மனுக்கள் போடுவதற்கு வசதியாக பெட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தன. அதைத்தொடர்ந்து மனு கொடுக்க வந்த மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுதொடர்பான அறிவிப்பை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் முன்பகுதியில் ஒட்டினர். அதில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு மனுக்கள் பெறுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு வந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com