மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலி, கூடலூர்-கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலியாக கூடலூர்- கேரள எல்லையில் வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலி, கூடலூர்-கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்
Published on

கூடலூர்,

கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மாவட்டங்களின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கேரள தண்டர்போல்ட் போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மலப்புரம், வயநாடு மாவட்டங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் அமைந்து உள்ளன. இதனால் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு கூடலூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனரா? என தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அப்போது ஆதிவாசி மக்களை சந்தித்து வனப்பகுதிக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர்- கேரள எல்லையில் உள்ள கிளன்ராக் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் வனப்பகுதியில் ரோந்து சென்ற நக்சல் தடுப்பு போலீசார் மனிதர்கள் தங்கி இருந்த அடையாளங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கேரள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கூடலூர்- கேரள எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சந்தேகப் படும்படி வாகனங்களில் அமர்ந்துள்ள நபர்கள் பற்றிய விபரங்களை கேட்ட பின்னரே கூடலூருக்குள் அனுமதித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததால் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள், வாகனங்களை தணிக்கை செய்த பின்னரே நீலகிரிக்குள் வர அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் வனப்பகுதிகள் மற்றும் அதன் கரையோரம் வசிக்கும் மக்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com