தேர்தல் கமி‌ஷன் பாரபட்சமாக செயல்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் கமி‌ஷன் பாரபட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது, இந்திய வனச்சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தம் குறித்து பேசினார். அப்போது அவர், ஆதிவாசிகளின் நிலம், காடு, தண்ணீர் பறிக்கப்படும் எனவும், ஆதிவாசிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவும் இந்த சட்டம் வழிவகுக்கும் எனவும் கூறியதாக தெரிகிறது.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் நேற்று முன்தினம் பதிலளித்து உள்ளார்.

அதில் அவர், வனச்சட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்தம் குறித்து சுருக்கமாக, எளிய மொழியில் மக்களுக்கு உரைத்ததாக கூறி இருந்தார். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பாரபட்சமற்ற, நேர்மையான, சமநிலையான அணுகுமுறையை தேர்தல் கமிஷன் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதில் மனு பரிசீலனையில் இருந்து வரும் நிலையில், தேர்தல் கமிஷன் நேர்மையாக செயல்படவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது இது தொடர்பாக அவர் கூறுகையில், தேர்தல் கமிஷன் நேர்மையாக செயல்படுவதாக தெரியவில்லை. மோடி சர்ச்சைக்குரிய விதத்தில் என்ன கூறினாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. ஆனால் வேறு யாராவது எதாவது பேசினால் அவர்கள் மீது தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பாய்கிறது என்று தெரிவித்தார்.

அனைத்து விதமான விதிமுறைகளையும் மோடி மீறினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறிய ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் ஒருவித அழுத்தத்தில் பணியாற்றி வருவது தெளிவாக தெரிவதாகவும் தெரிவித்தார்.

பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் சாதகமாக தேர்தல் தேதிகள் அமைந்திருப்பதாக, அதாவது பா.ஜனதாவுக்கு நீண்ட பிரசாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு மட்டும் கடைசி கட்டங்களில் தேர்தலை நடத்துவதாகவும் ராகுல் காந்தி புகார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com