ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை: கொரோனாவால்களை இழந்த கோவில்கள்

கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்டதால் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை திருச்சியில் களை இழந்து காணப்பட்டது.
Published on

திருச்சி,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் அம்மன் குளிர்ந்த மனதோடு பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பதோடு சிறந்த நற்பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதம் வரக்கூடிய அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன்கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கோவில்கள் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்தே மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக கிராமப்புறங்களில் மட்டும் சிறிய கோவில்கள் திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் நகர்பகுதியில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. அதே நேரம் வழக்கமான பூஜைகள் கோவில்களில் நடைபெற்றன. இதனால் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோவில்கள் களை இழந்து காணப்பட்டன. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து, மலர்கிரீடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

மேலும் அதிகாலை 3 மணியளவிலேயே நடை திறக்கப்பட்டு அதன் பின்னர் சிறு, சிறுகால இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கூட்டமின்றி கோவில் களையிழந்து காணப்பட்டது. இதனால் பூட்டப்பட்ட கதவுகளுக்கு வெளியே நின்றே, பக்தர்கள் அம்மன் சன்னதி நோக்கி கும்பிட்டு, கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். சிலர் கோபுரங்களை பார்த்து கும்பிட்டு சென்றனர். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலிலும், கமலவல்லி நாச்சியார் கோவிலிலும் நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று, கதவில் உள்ள சாவி துவாரத்தின் வழியாக அம்மனை வழிபட்டு சென்றனர்.

இதுபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வழக்கம்போல் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடைவீதியில் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டு சென்றனர். சிலர் மொட்டை அடித்து வேண்டுதல்களை நிறைவேற்றி சென்றனர்.

திருச்சி அய்யப்பநகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. மேலும், முசிறி, தா.பேட்டை, மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, திருச்சி நகர் மற்றும் புறநகரில் உள்ள பெரிய கோவில்கள் திறக்கப்படவில்லை. சிறிய அம்மன் கோவில்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. அங்கு பக்தர்கள், விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதனால் சிறிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து வழிபாடு செய்ததை காண முடிந்தது. பல பெரிய கோவில்கள் மூடப்பட்டதால் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com