சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு

திருப்பூரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
Published on

திருப்பூர்,

திருப்பூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் விருமாண்டி(வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அதே நிறுவனத்தில் 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார். விருமாண்டி அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 5-5-2014 அன்று பனியன் நிறுவனத்துக்கு வந்த சிறுமியை பெங்களூருவுக்கு கடத்திச்சென்றார்.

பின்னர் அங்கு அந்த பெண்ணை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விருமாண்டி சிறுமியை கடத்தி திருமணம் செய்த விவரம் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விருமாண்டியை கைது செய்து சிறுமியை மீட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்துக்காக விருமாண்டிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை, போக்சோ பிரிவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை, சிறுமி ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி. பிரிவின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com