திருச்சி,
திருச்சி தலைமை தபால் அலுவலக அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் கோடை பெக்ஸ்-2019 என்ற பெயரில் கோடைகால அஞ்சல்தலை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் பங்கேற்று அஞ்சல்தலை கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில், தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சி முடிகண்டத்தை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு அஞ்சல்தலை அச்சிட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடித்தந்த தங்க மங்கை கோமதியை பாராட்டி அவரை, ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் விஜயகுமார் மற்றும் ரகுபதி, லால்குடி விஜயகுமார், இந்திய அஞ்சல் துறை மை ஸ்டாம்ப் திட்டத்தில் அஞ்சல்தலை அச்சிட்டு காட்சிப்படுத்தினார்கள்.
அஞ்சல் தலையில் தங்க மங்கை கோமதி தங்கப்பதக்கத்துடன் இருப்பது போன்ற படமும், டெல்லி செங்கோட்டை புகைப்படமும் உள்ளது. அஞ்சல் தலையினை திருச்சி முடிகண்டம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் தடகள வீராங்கனை கோமதியிடம் வழங்கினார்கள். மை ஸ்டாம்ப் திட்டத்தில் முதல் முறையாக தடகள வீராங்கனை கோமதிக்கு அஞ்சல் தலை அச்சிட்டு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல்தலை கண்காட்சியில் விக்டோரியா ராணி, பேரோ தீவு, எனது இந்தியா, கல்வி நிறுவனங்கள், உலக நாடுகளின் அஞ்சல் தலை, இந்தியாவும் இயற்கை வளமும், பறவைகள், விலங்குகள், நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா, இந்தியாவின் பல்வேறு முகங்கள், தபால் துறையின் அஞ்சல் முத்திரைகள், திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்து கழிவறை அமைப்பது, பாரத ரத்னா விருது பெற்றவர்கள், ஆர்மி அஞ்சல் என பல்வேறு தலைப்பின் கீழ் அஞ்சல் தலை, அஞ்சல் உறைகள் காட்சிப்படுத்தப் பட்டன. அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் அகிலேஷ், யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் அஞ்சல் தலைகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், ரெயில்வே முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், அஞ்சல் துறை பணிகள் துணை இயக்குனர் சிவப்பிரகாசம், உதவி இயக்குனர்கள் கலைச்செல்வன், சாந்தலிங்கம், மைக்கேல் ராஜ் மற்றும் அஞ்சல் சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
இக்கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும். பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த பயிற்சி பட்டறையும் மே மாதம் அனைத்து புதன்கிழமைகளிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.