கறம்பக்குடியில் பொது மயான கொட்டகை இல்லாததால் வெட்ட வெளியில் பிணத்தை எரிக்கும் அவலம்

கறம்பக்குடியில் பொது மயான கொட்டகை இல்லாததால் வெட்ட வெளியில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் அவலநிலை உள்ளது. குப்பை கழிவுகளின் துர்நாற்றத்தில் ஈமச்சடங்குகளை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்திலேயே அதிக வரி வருவாய் ஈட்டும் பேரூராட்சியாகவும் உள்ளது. கறம்பக்குடி பேரூராட்சியில் இறந்தவர்களின் உடலை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்காக அக்னி ஆற்றின் கரையிலும், தட்டா ஆரணி பகுதியிலும் மயானங்கள் உள்ளன. இவற்றில் அக்னி ஆற்றின் கரையில் உள்ள மயானத்தின் அருகில் பேரூராட்சி குப்பை கிடங்கும் உள்ளது.

இந்நிலையில் கஜா புயலில் அக்னி ஆற்றின் மயான கொட்டகை சேதமடைந்து விழுந்தது. கஜா புயல் வீசி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இங்கு மயான கொட்டகை அமைக்கப்படவில்லை. பழைய இடிபாடுகளும் அகற்றப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை வெட்ட வெளியிலேயே எரிக்கும் அவலநிலை உள்ளது. மேலும் மயான பகுதியை சுற்றிலும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றத்தின் நடுவிலேயே ஈமச்சடங்குகள் செய்யும் நிலையும் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் நெருங்கிய உறவினர்கள் கூட மயான பகுதிக்கு வருவதில்லை.

கோரிக்கை

இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் பெரும் சிரமப்படுகின்றனர். தண்ணீர், மின்விளக்கு, முறையான பாதை வசதி என எதுவும் இல்லாததால் சாவிலும் நிம்மதி இல்லாதநிலை கறம்பக்குடி மக்களுக்கு உள்ளதால் அப்பகுதியில் வசிப்போர் வேதனை படுகின்றனர்.

கிராம பகுதியில் உள்ள மயானங்கள் எல்லாம் அனைத்து வசதியுடன் நவீன படுத்தப்படும் நிலையில், நல்ல வருவாய் தரும் பேரூராட்சி பகுதியில் பொது மயான கொட்டகை இல்லாதது கறம்பக்குடி பகுதி மக்களை வருத்தமடைய செய்துள்ளது. எனவே கறம்பக்குடி அக்னி ஆற்றி பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி, புதிய கொட்டகை அமைக்க வேண்டும். சுற்றுச் சுவர் எழுப்பி, தண்ணீர், சாலை வசதி ஏற்படுத்தி நவீன படுத்த வேண்டும் என கறம்பக்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடலை எரியூட்ட முடியாமல் சிரமம்

இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள புதுவலசல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு மயான கொட்டகை இல்லாததால் வெட்ட வெளியிலேயே இறந்தவர்களின் உடலை எரித்து வருகின்றனர். மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட முடியாமல் பெரும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே புதுவலசலில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com