சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம், தம்புசாமி தெரு, பிரின்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர டி மேதா(வயது 48). தொழில் அதிபரான இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தேவேந்திர டி மேதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேவேந்திர டி மேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தேவேந்திர டி மேதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தேவேந்திர டி மேதா பல்வேறு தொழில்கள் செய்து வந்தாலும் பங்குச்சந்தை தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதில், அவருக்கு சமீப காலமாக அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் பலரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். அதிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் தவித்து வந்தார். மேலும், கடன் கொடுத்தவர்களும் கடனை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த தேவேந்திர டி மேதா நேற்று அதிகாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்பு, தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால்தான் இவ்வாறு முடிவெடுத்ததாக செல்போனில் வாய்மொழி பதிவு செய்து வைத்துள்ளார் என்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.