மே மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15.75 நிர்ணயம் - அதிகாரி தகவல்

பச்சை தேயிலைக்கு மே மாத குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.15.75 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
Published on

மஞ்சூர்,

நீலகிரியில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதனை சார்ந்து 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வாக பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.30 என விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து தேயிலை வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மூலம் நீலகிரியில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை மாதந்தோறும் 1-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பிறகு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாதந்தோறும் முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மே மாத குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15.75 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய இணை இயக்குனர் பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலைக்கு நடப்பு மே மாத குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு 15 ரூபாய் 75 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்கு தகவல் கொடுக்கலாம்.

மேலும் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குனர்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை கடைபிடிக்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com