இசை உலகின் புதிய நட்சத்திரம்

இசைக்கருவிகளை இசைத்து இசைப்பிரியர்களின் இதயங்களை கவர்ந்துகொண்டிருக்கிறார், தீபக் ராம்ஜி.
Published on

சைக்கருவிகளை இசைத்து இசைப்பிரியர்களின் இதயங்களை கவர்ந்துகொண்டிருக்கிறார், தீபக் ராம்ஜி. 13 வயதாகும் இவர் டிரம்ஸ் இசைக்கலையில் கைதேர்ந்தவர். 10 வயதிலேயே டிரம்ஸ் இசையில் பல கிரேடுகளை கற்றுத்தேர்ந்து ஆசிய அளவில் சிறந்த இளம் டிரம்ஸ் கலைஞர் என்ற இடத்துக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறார். இவரது இசைத்திறனை அங்கீகரிக்கும விதமாக தமிழக அரசு கலை இளமணி விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் உற்சாக துள்ளல் போட வைக்கும் டிரம்ஸ்சை இவர் இசைக்கும் ஸ்டைலும் ரசிக்க வைக்கிறது. சில மணி நேரம் இவர் தொடர்ந்து இசைக்கிறார். இந்த இளம் வயதில் களைப்பின்றி உற்சாகத்துடன் இவ்வளவு நேரம் இசைக்க முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சோர்வின்றி அதிரடியாக இசையை முழங்க வைத்து அசத்திக்கொண்டிருக்கிறார். பள்ளி மாணவரான இவருக்கு பக்கபலமாக இருந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார், தந்தை ராமமூர்த்தி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். சிறுவயதில் தனக்குள் எழுந்த இசை ஆசையை மகன் மூலம் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார்.

ராமமூர்த்தி சொல்கிறார்:

எனது தந்தை ராமகிருஷ்ணன் ராணுவத்தில் பணியாற்றியவர். எங்கள் ஊர் கோவில் விழாவில் புரட்டாசி மாதம் பஜனை நடக்கும். அதில் எந்த இசைக்கருவியும் இல்லாமல் பித்தளை பானையில் தாளம் போட்டு என் தந்தை பாடுவார். அதில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ராணுவத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கு வந்துவிடுவார். அவரை பார்த்து எனக்கும் இசை மீது ஈடுபாடு வந்தது. ஆனால் அவர் இறந்தபிறகு இசையுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. நான் வேலையில் சேர்ந்த பிறகு 25 வயதில் மீண்டும் இசையை கற்க ஆசைப்பட்டேன். ஓராண்டு இசை வகுப்புக்கு சென்று தபேலா பயிற்சி எடுத்தேன். அது மிகவும் பிடித்து போனதால் கச்சேரிகளில் தபேலா வாசித்தேன்.

எனக்கு திருமணமாகி, தீபக் ராம்ஜி பிறந்தான். நான் தபேலா வாசிப்பதை அவன் பார்த்து அருகில் வருவான். தவழும் வயதிலே அவனுக்கு இசைஆர்வம் ஏற்பட்டதால் ஐந்து வயதில் இருந்து தபேலா கற்றுக்கொடுத்தேன் என்பவர், தன்னை போல் மகன் தபேலா இசைக்கருவிகளை சுமந்து கஷ்டப்படக்கூடாது என்றும் நினைத்திருக்கிறார்.

நான் கச்சேரிக்கு செல்ல வேண்டும் என்றால் தபேலாக்களை பைகளில் சுமந்துகொண்டு செல்ல வேண்டியிருக்கும். அவைகளை நீண்ட தூரம் எடுத்து செல்வதற்கும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சுமந்து கொண்டு செல்வதற்கும் கஷ்டமாயிருக்கும். என்னை போல் மகன் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து அவனுக்கு கீபோர்டு வாங்கி கொடுத்தேன். அவனோ அதை வாசிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனால் அனைத்து விதமான இசைகளையும் எழுப்பும் ரிதம்பேடை வாங்கி கொடுத்தேன். ஆனாலும் அவனுக்கோ டிரம்ஸ் மீதுதான் தீராத ஆர்வம் இருந்தது என்றார்.

அதற்கான காரணத்தை தீபக் ராம்ஜி சொல்கிறார்: அப்பா கச்சேரிக்கு சென்று கொண்டிருந்ததால் டி.வி.யில் இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை விருப்பி பார்ப்பார். அவர் தபேலா இசைப்பதையும், டி.வி. நிகழ்ச்சி களையும் பார்த்து எனக்கும் இசை மீது ஆர்வம் உண்டானது. ஆனால் கீபோர்டில் விரல்களை மட்டுமே பயன்படுத்தி அங்கும் இங்கும் கைகளை நகர்த்துவது எனக்கு சலிப்பை தந்தது. ஒருமுறை டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அவர் கைகளை பம்பரமாக சுழற்றி இசைத்தட்டுகளை அடிக்கும் ஸ்டைல் என்னை வெகுவாக ரசிக்க வைத்தது. அவரை போல் நாமும் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் உண்டானது. என் விருப்பத்தை அப்பாவிடம் சொன்னேன். அவர் உடனே டிரம்ஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டார். வீட்டிலும் டிரம்ஸ் இருந்தால்தான் சிறப்பாக பயிற்சி பெற முடியும் என்று அப்பாவிடம் கூறி அடம்பிடித்து டிரம்ஸ் வாங்கினேன். அதன் பிறகு எனது பயிற்சியும், இசை மீதான ஈர்ப்பும் அதிகமானது என்பவர் குறுகிய காலத்திலேயே 8 கிரேடுகளை கற்றுத் தேர்ந்து அசத்தி இருக்கிறார்.

7 வயதில் லண்டன் டிரினிட்டி மையத்தில் டிரம்ஸ் பயிற்சிக்கு சேர்ந்தேன். ஒவ்வொரு கிரேடை நிறைவு செய்யும்போதும் அடுத்த கிரேடு கடினமாக இருக்கும் என்பார்கள். இசை மீது முழு கவனத்தையும் செலுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். கடைசி கிரேடு மிகவும் சவாலாக இருக்கும் என்றும் சொன்னார்கள். நான் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தீவிரமாக பயிற்சி எடுத்தேன். அதன் பலனாக 90 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.

மற்ற இசைக்கருவிகளை விட டிரம்ஸ் இசைப்பதற்கு உடலும், மனமும் உற்சாகமாக ஒத்துழைக்க வேண்டும். கைகளும், விரல்களும்தான் துரிதமாக இயங்க வேண்டும். மணிக்கட்டு பகுதிக்கு மேல் உடல் இயக்கம் இருக்கக்கூடாது. ஆரம்பத்தில் அது தெரியாமல் ஆக்ரோஷமாக டிரம்ஸ் வாசிப்பேன். அதனால் தோள்பட்டை வலி, முதுகுவலி, கழுத்துவலி பாதிப்புக்கு ஆளானேன். சென்னைக்கு வந்த பிறகுதான் இசை பற்றி முழுமையான புரிந்து கொள்ள முடிந்தது என்கிற தீபக் ராம்ஜியின் பூர்வீகம் மதுரை.

அங்குதான் முதலில் டிரம்ஸ் கற்றிருக்கிறார். இசை நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்காகவே தந்தை இவரை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். தற்போது அம்பத்தூரில் தங்கி இருந்து அங்குள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். தாயார் சரவணா தேவி மதுரையில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிகிறார். அவருடன் தீபக் ராம்ஜியின் தங்கை அபிநேத்ரா வசிக்கிறார். அவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தாயை பிரிந்திருக்கும் வருத்தம் தீபக் ராம்ஜியின் பேச்சில் வெளிப்படுகிறது

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தில்தான் சென்னைக்கு வந்தேன். இங்கு வந்தபிறகுதான் இசையை பற்றி முழுமையாக கற்று தெரிந்து கொண்டேன். மிருதங்கத்தில் 6 கிரேடுகள் கற்றிருக்கிறேன். பியானோவில் 3 கிரேடு முடித்திருக்கிறேன். தப்பு இசையையும் கற்றிருக்கிறேன். தர்பூகா எனும் அரேபியன் இசைக்கருவியை இயக்கவும் பழகியிருக்கிறேன். கஹோன் எனும் மரப்பெட்டி இசைக்கருவியையும் எனக்கு இயக்க தெரியும். அது ஒரு வித்தியாசமான இசைக்கருவி. மரப்பெட்டி மீது அமர்ந்திருந்து அதில் எங்கு தட்டினாலும் இசை எழும். ஆப்பிரிக்க இசை கருவியான ஜெம்பேவும் இசைப்பன். 13 வயதிலேயே நான் 10 விதமான இசைக்கருவிகளை இசைக்க கற்றுக் கொண்டேன்.

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு என்னை தயார்படுத்திக்கொள்வதற்காகவே அத்தனை இசைக்கருவிகளையும் இயக்குவதற்கு பழகிக்கொண்டிருக்கிறேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. இசையமைப்பாளர் சத்யாவுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். இந்த வாய்ப்பு என்னை இசையுலகில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குடும்பத்தை பிரிந்து இருப்பதுதான் சற்று வருத்தம் தருகிறது. வார விடுமுறை நாட்களில் அப்பாவும், நானும் மதுரைக்கு செல்வோம். சில வாரங்களில் ஊருக்கு செல்லும் நாட்களில் இங்கே இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருக்கும். அப்போதுதான் ரொம்பவே வருத்தமாக இருக்கும். அடுத்த வருடம் 10-ம் வகுப்புக்கு செல்ல இருப்பதால் இசை மீது போதுமான கவனம் செலுத்த முடியாமல் போய்விடுமோ? என்ற கவலையும் இருக்கிறது. படிப்பு, இசை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சில சமயங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு புத்தகங்களுடன் செல்வேன். பயணங்களின்போது பள்ளிப்பாடங்களை படித்துவிடுவேன். எதன் மீது விருப்பம் கொண்டிருக்கிறோமோ அதன் மீது முழு கவனம் செலுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். எதை கற்றுக்கொண்டாலும் அதன் மீது தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். என்னை பார்த்து நிறைய பேர் இசை கற்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் முழு மனதோடு பயிற்சி எடுத்தால் மட்டுமே இசையில் தேர்ச்சி பெற முடியும். இல்லாவிட்டால் தொடர்பு விட்டுப்போய்விடும் என்கிறார்.

பிள்ளைகளுக்கு எந்த கலை மீது ஆர்வம் இருக்கிறதோ அதனை புரிந்து கொண்டு பெற்றோர் வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்கிறார், ராமமூர்த்தி. என்னால் சாதிக்க முடியாததை என் மகன் இசையில் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு பிடித்தமான இசை கருவியை அவன் கற்க விரும்பாதபோது அவன் விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். அதனால்தான் அவனால் இந்த நிலைக்கு வந்திருக்க முடிகிறது. டிரம்ஸ் ராம்ஜி என்று தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டான். ஒரு இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணியை சந்தித்தோம். அவர் என் மகன் டிரம்ஸ் இசைத்த விதத்தை பாராட்டி அவரது டிரம்ஸ் குச்சிகளை பரிசாக வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜாவிடமும் பாராட்டு பெற்றிருக்கிறான். ஸ்ரீகாந்த் தேவா இசைக்குழுவிலும் வாசித்திருக்கிறான். நான் அன்று நான்கைந்து பைகளில் இசைக்கருவிகளை கொண்டு செல்ல சிரமப்பட்டதால்தான் மகனை எளிய இசைக்கருவிகளை பயிற்றுவிக்க பழக்கினேன். ஆனால் அவனோ இப்போது பத்து பைகளில் இசைக்கருவிகளை சுமந்தாலும், மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனுக்கு இசைக்கருவிகள் சுகமான சுமைகளாக இருக்கின்றன. அவனது வளர்ச்சி, அவனைப்போன்ற வயதினருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்று மகிழ்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com