ஈராக் மற்றும் சிரியாவில் கொரில்லா போர்முறையை கையிலெடுக்க போகும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

சிரியா மற்றும் ஈராக்கில் கடும் பின்னடைவை சந்தித்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமானது அடுத்ததாக 3 முக்கிய நகர்வுகளை முன்னெடுத்து செயல்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Published on

அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஈராக் ராணுவம், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய கோட்டையாக விளங்கிய மொசூலை கைப்பற்றி, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழுவினருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வடக்கு ஈராக்கில் அமைந்துள்ள மொசூலில் ஐ.எஸ் அமைப்பினரால் கலிஃபேட் பிரகடனப்படுத்தி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகரத்தை விடுவித்துவிட்டதாக ஈராக்கிய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, அந்த குழுவால் கலிபா ஆட்சி நடைபெறுவதாக அறிவித்துக் கொள்ளப்பட்ட வடக்கு சிரியாவின் ராக்கா, அமெரிக்க ஆதரவுப் படைகளின் தாக்குதலை அடுத்து, மீண்டும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில் உள்ளது.

இருப்பினும், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினை முற்றாக அழித்தொழிக்க முடியாது எனவும் அதற்கு விரிவான திட்டமிடலுடன் நீண்ட காலமாகும் எனவும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

தற்போதைய சூழலில் கடும் பின்னடைவை சந்தித்திருக்கும் ஐ.எஸ் அமைப்பானது, தங்கள் ஆதிக்கத்தை சிரியா மற்றும் ஈராக்கின் நிலப்பரப்பில் இருந்து அடுத்தகட்டம் நோக்கி நகர்த்தலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதன்படி, ஈராக் மற்றும் சிரியாவில் கொரில்லா போர்முறையை அக்குழு கையிலெடுக்கும் எனவும் நிலப்பகுதியைக் கையிலெடுக்காமல் தனது போரைத் தொடரும் எனவும் ஐ.எஸ் அமைப்பு குறித்து விரிவான நூல் ஒன்றை வெளியிட்டுள்ள பால் ரோஜர்ஸ் விளக்குகிறார்.

மேலும் தங்களது கொள்கைகளை உலகுக்கு பரப்பும் செயலில் அக்குழு ஈடுபடும், மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் மற்றும் வடக்கு ஆப்ரிக்காவில் இந்த முயற்சிக்கு ஏற்கனவே வெற்றி கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற எதிரி இலக்கை நோக்கி அக்குழு போரை முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்தைத் தொடரும் எனவும் பால் ரோஜர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com