வரும் காலங்களில் கால்நடைத்துறை திட்டங்களை பெற காதுவில்லை எண் அவசியம்: கலெக்டர் அன்புசெல்வன் தகவல்

வரும் காலங்களில் கால்நடைத்துறையின் திட்டங்களை பெறுவதற்கு கால்நடைகளின் காதுவில்லை எண் அவசியம் என கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
Published on

கடலூர்,

வரும் காலங்களில் கால்நடைத்துறையின் திட்டங்களை பெறுவதற்கு கால்நடைகளின் காதுவில்லை எண் அவசியம் என கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் முதலாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து மாடுகளுக்கும் காதுவில்லை எண்(ஐ.என்.ஏ.பி.எச்.) அணிவிப்பது இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த காதுவில்லை எண் கால்நடை பெருக்கம் மற்றும் நலப்பணிகள் தகவல் தொகுப்பில் தொகுக்கப்பட உள்ளது. மேலும் கால்நடைகளை அடையாளப்படுத்துவதற்கும், உரிமையாளர் யார் என அறிவதற்கும், கால்நடைகள் தொலைந்து போகும் பட்சத்தில் கண்டறிவதற்கும் முக்கியமானதாக இருக்கும்.

இனி வரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் கால்நடைகளின் காது வில்லை எண்கள் அவசியம்.

எனவே கால்நடை பராமரிப்புத்துறையினர் தங்களுடைய கிராமத்துக்கு வரும்போது கால்நடைகளுக்கு தடுப்பூசி பணியை மேற்கொள்வதற்கும், காதுவில்லை எண் அணிவிப்பதற்கும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முகாமுக்கு வரும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை எண், செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். காதுவில்லை அணிவதால் மாடுகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com