தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்ற பரபரப்பு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சொத்து விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் 2007-ம் ஆண்டு கேட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தர மறுத்தது. உடனே அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை மத்திய தகவல் ஆணையம் ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் வருவதால், அவரது கோரிக்கையின்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சொத்து குறித்த தகவல்களை வெளியிடுமாறு சுப்ரீம் கோர்ட்டுக்கு கூறியது.

ஆனால் அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என 2010-ம் ஆண்டு, ஜனவரி 10-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின்கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகத்தை கொண்டு வந்தால் அது நீதித்துறை சுதந்திரத்தை பாதித்து விடும் என்ற சுப்ரீம் கோர்ட்டு வாதத்தையும் டெல்லி ஐகோர்ட்டு ஏற்க மறுத்தது. நீதித்துறை சுதந்திரமானது, நீதிபதியின் சலுகை அல்ல; அது அவர்கள் மீதான பொறுப்பு எனவும் கூறியது. இதன் காரணமாக எஸ்.சி.அகர்வால் கேட்ட தகவல்களை வழங்க வேண்டிய நிலை சுப்ரீம் கோர்ட்டுக்கு உருவானது.

ஆனால் டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டின் தலைமை பதிவாளர், சுப்ரீம் கோர்ட்டின் மத்திய தகவல் ஆணையர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. எஸ்.சி.அகர்வால் தரப்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிற நிலையில், இந்த வழக்கில் 13-ந் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வரும் என பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிபதிகள் என்.வி.ரமணாவும், டி.ஒய்.சந்திரசூட்டும் தீர்ப்பு வழங்கினர்.

இருப்பினும் 3 நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்புதான் செல்லுபடியாகும். அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அரசியல் சாசனத்தின்கீழ் செயல்படுகிற ஜனநாயக நாட்டில், சட்டத்தை விட நீதிபதிகள் மேலானவர்கள் அல்ல.

* தகவல் அறியும் உரிமையும், தனிப்பட்ட உரிமைக்கான உரிமையும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள் ஆகும். ஒன்று, மற்றொன்றை விட முன்னுரிமை பெற முடியாது.

* நீதித்துறை சுதந்திரமும், பொறுப்பு கூறலும் இணைந்து கை கோர்த்துச்செல்கின்றன. வெளிப்படையான தன்மை, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தி விடாது. வெளிப்படைத்தன்மைதான், நீதித்துறை சுதந்திரத்தை பலப்படுத்தும்.

* தகவல் அறியும் உரிமை சட்டத்தை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்த முடியாது. வெளிப்படைத்தன்மையை கையாள்கிறபோது, நீதித்துறை சுதந்திரத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

* தகவல் அளிக்க வேண்டியதை மறுத்து, நீதித்துறை சுதந்திரத்தை அடைய இயலாது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com