பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
Published on

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு நாகையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்ட கிளை தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்வாணன், பொருளாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் அமுதா வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரசு ஊழியர்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தை நடத்தும் போது, அதனை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, போலீஸ்துறை மூலம் அடக்கு முறையை ஏவி விடுவதை வன்மையாக கண்டிப்பது, நாகையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி, ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். நாகை நகரத்தில் மாசுகளை கட்டுப்படுத்த கட்டப்பட்ட எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

நாகை தாமரை குளத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஊதிய மாற்றம் தொடர்பாக 1.1.2016 முதல் உள்ள 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி கல்லூரிக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் ராணி, துணைத்தலைவர் ஜோதிமணி, கிளை துணைத்தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com