நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
Published on

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் நீரை பங்கீடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண்பதற்காக தீர்ப்பாயங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காவிரி, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட 9 நதிநீர் ஆணையங்கள் உள்ளன. ஒவ்வொரு நதிநீர் பிரச்சினைக்கும் ஒரு தீர்ப்பாயம் அமைப்பது என்ற நடைமுறையை மாற்றி அனைத்து நதிநீர் பங்கீட்டுக்கும் ஒரே தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக நாடாளுமன்ற மக்களவையில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் (திருத்தம்) மசோதா-2019 என்ற இந்த மசோதாவை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது அமலில் இருக்கும் தீர்ப்பாயங்கள் நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறிவிட்டன. 33 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட ஒரு பிரச்சினையை தீர்க்காத தீர்ப்பாயமும் இருக்கிறது. இந்த தீர்ப்பாயங்களின் ஒழுங்கற்ற அமர்வுகளால் தீர்ப்புகள் தாமதமாகின்றன. ஓரிரு தீர்ப்பாயங்களை தவிர பிற தீர்ப்பாயங்கள் ஒழுங்காக விசாரிப்பது இல்லை.

எனவே அனைத்து விதமான நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் தீர்ப்பாயம் என்ற பெயரில் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படும். இது பல்வேறு அமர்வுகளை கொண்டதாக இருக்கும். தற்போது இருக்கும் தீர்ப்பாயங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு அவற்றின் வழக்குகள் அனைத்தும் இந்த தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும்.

8 உறுப்பினர்களை கொண்ட இந்த தீர்ப்பாயம், ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், 3 நீதித்துறை உறுப்பினர்கள், 3 நிபுணர்குழு உறுப்பினர்களை பெற்றிருக்கும். இவர்கள் அனைவரும் தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசால் நியமிக்கப்படுவர்.

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரை தலைவராக கொண்ட இந்த தீர்ப்பாயம், 2 ஆண்டுகளுக்குள் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும். இதை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க முடியும். இந்த பிரச்சினை குறித்து மாநிலங்கள் சார்பில் மீண்டும் தீர்ப்பாயத்தை அணுகினால், 6 மாதங்களுக்குள் அடுத்த தீர்ப்பை மத்திய அரசிடம் தீர்ப்பாயம் வழங்க வேண்டும். இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் அனைத்தும் உடனுக்குடன் அரசிதழில் வெளியிடப்படும். இவ்வாறு கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா தொடர்பாக மாநில அரசுகளை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த மசோதா முற்றிலும் குறைபாடு நிறைந்தது எனக்கூறிய காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி, தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரோ அல்லது மக்களவையின் தனிப்பெரும் எதிர்க்கட்சி தலைவரோ இடம்பெற வழி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

இந்த மசோதா மீது தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, தீர்ப்பாயங்களின் உத்தரவுகளை மாநிலங்கள் மதிக்காமல், அவற்றை அமைப்பதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை எனவும், நேரடியாக கோர்ட்டு அவமதிப்பில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நதிநீர் பங்கீடு பிரச்சினையால் நீண்ட காலமாக தமிழ்நாடு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், தீர்ப்பாயங்கள் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறோம் எனவும், இந்த விவகாரத்தில் அனைத்து மத்திய அரசுகளும் வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். நதிகளை தேசியமயமாக்காமல் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.

அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மந்திரி கஜேந்திர சிங் செகாவத் பதில் அளித்து பேசுகையில், 2013-ம் ஆண்டில் இந்த மசோதா குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அது இறுதி செய்யப்படும் முன் மாநிலங்கள் தெரிவித்த பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மந்திரியின் பதில் உரைக்கு பின் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா இனி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், மசோதா சட்ட வடிவம் பெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com