கீரனூர் அருகே பரிதாபம்: பெண் சரமாரியாக வெட்டிக் கொலை கள்ளக்காதலன் கைது

கீரனூர் அருகே பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
Published on

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே புலியூர், களரிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு. கொத்தனார். இவரது மனைவி சத்தியா (30). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார்.

புலியூரை சேர்ந்த மணி என்பவர் மகன் பூபதி (30). தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சத்தியாவுக்கு, பூபதிக்கும் வீடும், வயலும் அருகருகே இருப்பதால் வயல்பகுதியில் புல் அறுக்க செல்லும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம் சத்தியாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சத்தியாவை அவரது பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் சத்தியா, பூபதியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சத்தியா வயல்பகுதியில் புல் அறுத்து கொண்டிருந்ததை அறிந்த பூபதி, அரிவாளுடன் அங்கு சென்றார். பின்னர் அங்கு புல் அறுத்துக் கொண்டிருந்த சத்தியாவின் பின்புறமாக சென்று எதிர்பாராதவிதமாக பின் கழுத்து, தோள்பட்டை, கை உள்பட பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

அப்போது எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என ஆவேசமாக கூறி கொண்டே வெட்டியுள்ளார். சத்தியா வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் அலறிய படியே கீழே விழுந்தார்.

சத்தியாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதற்கிடையே பூபதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் 2 மணி நேரம் கழித்து தான் ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிகிறது. சத்தியாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சத்தியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியாவை அரிவாளால் வெட்டி கொலை செய்த பூபதியை கைது செய்தனர். பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com