பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குமரிக்கு துறைமுகம் கொண்டு வரப்படும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குமரிக்கு துறைமுகம் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் குமரிக்கு துறைமுகம் கொண்டு வரப்படும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
Published on

பூதப்பாண்டி,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை இறச்சகுளத்தில் இருந்து திறந்த ஜீப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் பூதப்பாண்டி பகுதியில் கிராமம், கிராமமாக சென்று அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பல இடங்களில் அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாலப்பணிகள், சாலை பணிகள் நடந்துள்ளன. தங்க நாற்கர சாலை முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு வரை வந்த நான்கு வழிச்சாலையை, அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ள வில்லை. மீண்டும் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு, காவல்கிணறில் இருந்து குமரி மாவட்டம் முழுவதும் 90 சதவீத வேலைகளை முடித்துள்ளது.

நிலங்கள் எடுப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தால், இதற்கு முன்பு நான்குவழிச்சாலை பணிகள் முடிந்து இருக்கும். பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும். துறைமுகம் திட்டம், விமான நிலையம் போன்றவை கண்டிப்பாக குமரிக்கு வரும். எனவே அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

பின்னர் அவர் நாவல்காடு, ஈசாந்தி மங்கலம், தெரிசனங்கோப்பு, சிறமடம், ஞாலம், வீரவநல்லூர், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், கேசவன்புதூர் போன்ற பகுதிகளிலும் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் தாமஸ் ரசோல் திரிமேனி நேற்று புத்தேரி திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, அழகியபாண்டியபுரம், கேசவன்புதூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com