பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர் - தேர்தல் நேரத்தில் சர்ச்சை

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது இங்கிலாந்து பிரதமர், நிருபரின் செல்போனை பறித்த சர்ச்சை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழமைவாத காட்சிக்கும், ஜெர்மி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரெக்ஸிட் விவகாரம் இந்த தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

தேர்தலையொட்டி பிரதமர் போரிஸ் ஜான்சன் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சுகாதாரத்துறை சேவை அமைப்பின் விவகாரங்கள் தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நாட்டில் நிலவும் சுகாதார பிரச்சினைகள் குறித்தும், சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் அவரிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

அப்போது, தனியார் செய்தி சேனல் ஒன்றின் நிருபரான ஜோ பைக் என்பவர் தனது செல்போனில் லண்டனில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நிமோனியா பாதிப்பால் உடல்நல குறைவு ஏற்பட்ட 4 வயது சிறுவன் தரையில் படுக்கவைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றை போரிஸ் ஜான்சனிடம் காட்டி கடும் விமர்சனம் செய்தார்.

இதனால் கோபமடைந்த போரிஸ் ஜான்சன் ஜோ பைக்கின் செல்போனை அவரிடம் இருந்து பறித்து அதனை தனது சட்டை பையில் வைத்துக்கொண்டார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை ஜோ பைன் தனது டுவிட்டரில் பகிர்ந்தார். உடனடியாக அந்த வீடியோ வைரலானது. 2 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அதை பார்த்தனர்.

அவர்களில் பலரும் போரிஸ் ஜான்சனை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைனும் இந்த சம்பவம் தொடர்பாக போரிஸ் ஜான்சனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாளை தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் போரிஸ் ஜான்சன் இப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com