கூடலூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி பிடிபட்டார்

கூடலூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி போலீசில் பிடிபட்டார்.
Published on

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, கூடலூர் கிளை சிறையில் போலீசாரால் அடைக்கப்படுகின்றனர். இந்த சிறையை சுற்றிலும் போலீஸ் நிலையம், அரசு கருவூலம், தாசில்தார் மற்றும் வன அலுவலக கட்டிடங்கள் உள்ளன. கூடலூர் கிளை சிறையில் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் தாலுகா புளியாம்பாரா பகுதியை சேர்ந்த தியாகராஜ்(வயது 24) என்பவர் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 1-ந் தேதி கிளை சிறையில் போலீசார் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கைதி தியாகராஜ் சிறையில் இருந்து தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எந்த நாளில் தப்பி சென்றார் என்பது தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் கைதியின் புகைப்படங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டு, தகவல் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இதுதவிர சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணையும் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகில் கைதி தியாகராஜ் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு ஒரு பேக்கரியின் அருகில் நின்றிருந்த தியாகராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை கூடலூர் சிறையில் போலீசார் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com