திருவள்ளூர்,
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது.
இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி காந்தியடிகளின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தீபாவளி பண்டிகையையொட்டி முதல் கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி ஆகிய இடங்களில் கதர் அங்காடிகளும், பூண்டியில் சோப்பு அலகும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு கதர் கிராமிய தொழில் வாரியத்தின் கதர் ரகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கதர் கிராமிய தொழில் ஆணைக்குழு மற்றும் தமிழக அரசு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு 2017-2018-ல் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் 2 கதரங்காடிகளுக்கு தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ.34 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு ரூ.44 லட்சம் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தவிர கிராமிய பொருட்கள் கடந்த ஆண்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. எனவே கதர் மற்றும் கிராமிய பொருட்களை கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் செய்ய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு விற்பனை குறியீடாக ரூ.64 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயன் அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்.