மண்டபம், ராமேசுவரத்தில் சூறாவளி காற்றால் பொதுமக்கள் அவதி; மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மண்டபம்,ராமேசுவரத்தில் தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ன.
Published on: 

பனைக்குளம்,

மண்டபம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சிலநாட்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சாலையில் காற்றில் மண் தூசியாக பறப்பதால் சுவாசக்கோளாறு, கண் பாதிப்பால் சிரமப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமுடியாத நிலை உருவாகி உள்ளது.

ராமேசுவரம் தங்கச்சிமடத்திற்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாள பகுதியில் 2 இடங்களில் மணல் மூடியது. இதையடுத்து எந்திரம் மூலம் மணல் அகற்றப்பட்டது. மண்டபம், பாம்பன் பகுதியில் வீசிவரும் சூறாவளி காற்றால் சாலையை மணல் மூடிஉள்ளது. இதனால் வாகனங்கள் மணலில் செல்லமுடியாத நிலை உருவாகியது. கடற் கரையை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் மணல் தூசியாக பறந்து விழுவதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தனுஷ்கோடியில் சூறாவளி காற்றால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எம்.ஆர்.சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை செல்லும் சாலையில் பல இடங்களில் மணல் மூடியுள்ளது.அங்குள்ள மீன் பிடி துறைமுகத்தை தாண்டி கடல் அலை பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப் பட்டதால் மண்டபம், ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரம் உள்ள கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மண்டபம், ராமேசு வரம் பகுதிகளில் தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பலத்த காற்றுகாரணமாக நேற்று ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி, சென்னை, மதுரை செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன.

X