மணல்மேடு,
நாகை மாவட்டம், மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், நமச்சிவாயபுரம், காளி, திருவாளப்புத்தூர், கடக்கம், ரெட்டிபாளையம், சித்தமல்லி, தலைஞாயிறு, நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர்களை தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மணல்மேடு பகுதியில் போதிய அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது பனிப்பொழிவாக இருப்பதால் அறுவடை செய்த நெல்லில் ஈரப்பதம் அதிகமாகிறது. ஈரப்பதம் அதிகமானால் நெல்லை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக விவசாயிகள், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நெற்பயிரை சாகுபடி செய்ய வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், வருமானம் இன்றியும் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆட்கள் பற்றாக்குறையால் வெளியூர்களில் இருந்து நெல் அறுவடை செய்யும் எந்திரங்களை கொண்டு வந்து, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். எனவே, மணல்மேடு பகுதியில் கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.