பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி வாசலில் வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு நடராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி வனிதா. இவர்களுடைய 4 வயது மகன் விஷ்ணு. சிறுவன் விஷ்ணு, மணல்மேடு அருகே பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

தினமும் அவன் பள்ளிக்கூட வேனில் பள்ளிக்கூடம் சென்று வருவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் விஷ்ணுவை அவனது பெற்றோர் பள்ளிக்கு வேனில் அனுப்பி வைத்தனர்.

அந்த வேனில், சிறுவன் விஷ்ணு உள்பட 20 மாணவ, மாணவிகள் இருந்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி பகுதியை சேர்ந்த உதயசங்கர்(31) என்பவர் அந்த வேனை ஓட்டிச்சென்றார். பள்ளிக்கூட வாசல் முன்பு காலை 9 மணிக்கு அந்த வேன் வந்து நின்றது. அப்போது வேனில் இருந்து சிறுவன் விஷ்ணு கீழே இறங்கினான்.

இதை அறியாத டிரைவர் உதயசங்கர், வேனை பள்ளிக்கூட வளாகத்துக்குள் ஓட்டிச்செல்ல வேனை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் சக்கரத்தில் சிக்கிய விஷ்ணு சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தான். உடனே வேன் டிரைவர் உதயசங்கர் அந்த இடத்திலேயே வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வேனில் அடிபட்டு சிறுவன் இறந்த தகவல் மணல்மேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர்.

பள்ளிக்கூடம் முன்பு பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் அதிர்ச்சி அடைந்த பள்ளிக்கூட நிர்வாகத்தினர், சிறுவன் விஷ்ணு உடலை அங்கிருந்து ஆட்டோ மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்லலாம் என கேட்டு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்த சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார்(பொறுப்பு) திருமாறன், மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள், பள்ளிக்கூட நிர்வாகத்தினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவேண்டும். விபத்தை ஏற்படுத்திய பள்ளிக்கூட வேனுக்கு முறையான தகுதி சான்று பெறப்பட்டுள்ளதா? என விளக்கம் அளிக்க வேண்டும். வேனை ஓட்டிய டிரைவர் முறையாக உரிமம் பெற்றவரா? என தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன், அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் உடலை பார்வையிட்டார். பின்னர் அந்த பள்ளியின் தாளாளர் ஹேமா வீரமணியிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் வேனை ஓட்டிய டிரைவர் உதயசங்கரை கைது செய்யுமாறு மணல்மேடு போலீ சாருக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவர் உதயசங்கரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் வேன் டிரைவர் உதயசங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்து மணல்மேடு போலீசார் கைது செய்தனர்.

வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் மணல்மேடு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com