புதுடெல்லி,
திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம் 11-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில், பா.ஜனதாவினர் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, 168 வாக்குச்சாவடிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தா, தொகுதி முழுவதும் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், அவசர வழக்காக விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். வரிசைப்படிதான் விசாரிப்போம் என்று அவர்கள் கூறினர்.