சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது; பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கருத்து

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறினார்.
Published on

பெங்களூரு,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அரசியல் சாசன அமர்வில் இருந்த 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது நீதித்துறை மீதான மரியாதையை அதிகரித்துள்ளது. உண்மையே வெல்லும் என்ற சொல்லுக்கு பலம் வந்துள்ளது.

மக்கள் சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும். அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். அனைவரும் சமமாக வாழ்வதற்கான மரியாதை, நியாயம் கிடைப்பது போல் உள்ளது.

சட்டத்தின் மீது அனைவருக்கும் மரியாதை உள்ளது என்பதை இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. கர்நாடகத்தில் அனைவரும் அமைதி, நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும். அனைத்து மதத்தினரும் சேர்ந்து கோவில் கட்ட வேண்டும் என்பது கோர்ட்டின் விருப்பம். கோர்ட்டின் இந்த விருப்பம் நிறைவேறட்டும் என்று நான் வேண்டுகிறேன். இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல. இது இந்தியாவின் வெற்றி. அதனால் நாங்கள் வெற்றி விழாவை கொண்டாடவில்லை.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com