வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நல்லக்கண்ணு குற்றம் சாட்டினார்.
Published on

விழுப்புரம்,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நேற்று தொடங்கி நாளை (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நடைபெற்ற மாநாட்டுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சரவணன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1968-ம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு வெண்மணியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. சுமார் 47 பேர் இந்த போராட்டத்தில் உயிரிழந்தனர். அதன் பின்னர் விவசாய தொழிலாளர்கள் வாழ்க்கை முறை பற்றி நீண்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் கிராமப்புறங்களில் வாழும் கூலி தொழிலாளர்கள், நகர்புறத்தில் வாழும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினர் வாழ்க்கை முறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி நியாயமான கூலி வழங்கப்பட வேண்டும். ஊராட்சி, நகராட்சியில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய அளவில் கூலி வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் வறட்சி அதிகரித்து, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக மயமாக்கல் திட்டத்தால் விவசாயம் பாதிப்பு மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆண், பெண் பாகுபாடு பார்க்காமல் இருவருக்கும் சமமாக ஊதியம் வழங்க வேண்டும். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் வாழ வழியின்றி நகர்புறத்திற்கு குடியேறினார்கள். இப்போது திருப்பூர் போன்ற மாநகரங்களில் வேலை கிடைக்காததால் மீண்டும் கிராமத்திற்கு வந்துள்ளனர். தற்போதைய ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. தீண்டாமை மிகப்பெரிய நோயாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 39 ஆயிரம் போராட்டம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அதிகளவு திறந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில நிர்வாகிகள் அமிர்தலிங்கம், மூர்த்தி, துரைமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com