டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு வருகிற 31-ந் தேதிக்குள் எட்டப்படும்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு வருகிற 31-ந் தேதிக்குள் எட்டப்படும் என வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
Published on

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் எந்திரம் மூலம் நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தமிழக வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு வாடகை நடவு எந்திரங்கள் தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி வேளாண் அலுவலர்களை இயக்குனர் அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

31-ந் தேதிக்குள் எட்டப்படும்

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிக்குள் இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தி உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தின்படி இதுவரை 5 தவணைகளில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 6-வது தவணை விரைவில் வழங்கப்படும்.

பயிர்க்கடன்

குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. தனியார் கடைகளில் உரம் இடு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் எப்போதும் போல பணத்தை செலுத்தி உரங்களை பெற்றுக்கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக உரம் வாங்கலாம்.

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. கிசான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com