தற்காலிக சாலை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நாகலாபுரம், சுப்பாநாயுடுகண்டிகை, அச்சம நாயுடுகண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது.
பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவதால் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் இதர பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.28 கோடி நிதி ஒதுக்கியது.
இந்த நிதியை கொண்டு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பாலப்பணிகள் நடைபெறும் இடதுபுறத்தில் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக தற்காலிக செம்மண்சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியாகதான் தற்போது ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவு பெறவில்லை. ஆமை வேகத்தில் பாலப்பணிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
குண்டும் குழியுமாக மாறிய சாலை
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் பெய்த பலத்த மழைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள தற்காலிக செம்மண் சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். செம்மண்ணை கொண்டு தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தற்காலிக செம்மண் சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தற்காலிக சாலை 5 நிமிடத்தில் அடைந்து விடலாம். தற்போது சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளதால் சாலையை கடக்க 20 நிமிடங்கள் ஆகிறது. மேலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாலப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.