மும்பை,
மும்பையில் உள்ள புறநகர் ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் வடபாவ், டீ, காபி மற்றும் குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகள் என பல்வேறு உணவுபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் குர்லா ரெயில் நிலையத்தில் உள்ள 7-வது எண் பிளாட்பாரத்தில் உள்ள உணவகத்தில் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் தொழிலாளி ஒருவர் லெமன் ஜூஸ் தயார் செய்யும் வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்த லெமன் ஜூசை பறிமுதல் செய்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த உணவகமும் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்தநிலையில் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரெயில்வே பிளாட்பார உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட லெமன் ஜூசில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கோலிபார்ம் பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியா மனிதனுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற உடல்நலக்கோளறை ஏற்படுத்துபவை ஆகும்.
இதையடுத்து சுகாதாரமற்ற ஜூசை விற்பனை செய்த அந்த உணவக உரிமதாரருக்கு மத்திய ரெயில்வே ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது.