மத்திய மந்திரி மாமல்லபுரம் வருகை புராதன சின்னங்களை கண்டுகளித்தார்

மாமல்லபுரத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் ரசாயனம், உரத்துறை இணை மந்திரி மன்சுக்மாண்டவியா நேற்று தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா வந்தார்.
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் ரசாயனம், உரத்துறை இணை மந்திரி மன்சுக்மாண்டவியா நேற்று தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா வந்தார். கடற்கரை கோவில் அருகில் மத்திய மந்திரியை தமிழக அரசு சார்பில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், தொல்லியல் துறை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை மத்திய மந்திரி கண்டுகளித்தார். அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளையும், பல்லவர் கால சிற்பங்கள், அது உருவாக்கப்பட்ட காலம், அதனை செதுக்கிய மன்னர்கள் குறித்த விவரங்களை தொல்லியல் துறை அதிகாரிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் விளக்கி கூறினர். முன்னதாக கடற்கரை கோவிலில் மத்திய மந்திரி சுற்றி பார்த்தபோது அங்கு கல்வி சுற்றுலாவுக்காக வருகை தந்த பள்ளி மாணவ- மாணவிகளை மத்திய மந்திரி எங்கிருந்து வருகிறீர்கள் என அன்புடன் விசாரித்து அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் கண்டுகளித்து புகைப்படம் எடுத்த முக்கிய புராதன பகுதியில் மத்திய மந்திரி மன்சுக்மாண்டவியா தன் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். மத்திய மந்திரியுடன் மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பலராமன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com