உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்கியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கி உள்ளது.
Published on

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் கடந்த 7 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக இந்த கொரோனா வைரசால் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காதான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இந்த வைரஸ் காவு வாங்கியுள்ளது.

கொரோனா வைரசை சீனா திட்டமிட்டே பரப்பியதாக குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பை கடுமையாக சாடி வந்த டிரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவைத் துண்டிப்பதாக கடந்த மே மாதமே அறிவித்தார்.

மேலும் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவியையும் டிரம்ப் நிறுத்தினார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019ல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி அளித்தது.

இப்படியான சூழலில் அமெரிக்கா திடீரென நிதியுதவியை நிறுத்தியது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

எனவே இந்த முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பும் பல சர்வதேச நாடுகளும் வலியுறுத்தின.

ஆனாலும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான முறைப்படியான நடவடிக்கைகளை அமெரிக்கா தற்போது தொடங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிப்பு கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா வழங்கியுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டானே துஜாரிக் கூறுகையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அடுத்த ஓர் ஆண்டில் வெளியேறுகிறோம் என்பதற்கான முறைப்படியான கடிதத்தை அமெரிக்கா கடந்த 6-ந்தேதி வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு ஓர் ஆண்டில் அதாவது 2021-ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி நடைமுறைக்கு வரும். உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான அனைத்து நடைமுறைகளும், விதிகளும் சரியாக இருக்கிறதா என்பதை ஐ.நா. பொதுச்செயலாளர் ஆய்வு செய்வார் எனத்தெரிவித்தார்.

அதேசமயம் நவம்பர் மாத நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன், நான் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான நடைமுறையைத் தொடங்கி இருப்பதற்கு எம்.பி.க்கள் பலரும் அரசியல் தலைவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவு அமெரிக்க மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com